அந்த நகரம், மிராக்கஸின் காதலி இலாராவின் இசையால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இலாராவின் வயலின் இசை, கடலின் அலைகளோடு கலந்து, காற்றில் பரவி, மக்களின் உள்ளங்களில் இன்பத்தை நிரப்பும்.
ஒரு பௌர்ணமி இரவில், அரண்மனையின் பின்புறம் அமைந்திருந்த ரோஜாத் தோட்டத்தில், இலாரா தன் வயலினை வாசித்துக்கொண்டிருந்தாள். மிராக்கஸ், அவள் கண்களில் ஒளிர்ந்த காதல் இசையை ரசித்துக் கொண்டிருந்தான்.
"இலாரா, உன் இசை என்னை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது," என்றான் மிராக்கஸ்.
"அது என் இதயத்தின் குரல், மிராக்கஸ்," என்று சொல்லி, இலாரா தன் இசையை தொடர்ந்தாள்.
ஆனால், அந்த இனிமையான தருணம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஒரு கொடிய விஷநாகம் செடிகளின் நடுவில் இருந்து அவளை நோக்கி மெல்ல வந்தது. அதை யாரும் கவனிக்கவில்லை.
இசை வெள்ளத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்த இலாராவின் இடது பாதத்தில் தன் விஷப்பற்களை பதித்து ஓடி மறைந்தது அது.
இலாரா அலறியபடி மிராக்கஸின் கைகளில் விழுந்தாள். மிராக்கஸ் திகைத்து நின்றான். அவன் மடியில் சரிந்த , இலாராவின் வாயில் நுரை தள்ளியது. கண்கள் மேலே செருகியது.
அவள் உயிர் மெல்ல மெல்ல அவன் கண்ணெதிரிலேயே பிரிவதைப் பார்த்த மிராக்கஸ், அழுதான். அரற்றினான். பித்துப் பிடித்தவன் போலானான்.
இலாரா இல்லாத உலகம் மிராக்கஸுக்கு இருளாகத் தெரிந்தது. அவன் தன் அரண்மனையை விட்டு வெளியே வரவே இல்லை.
நாள்கள் செல்லச் செல்ல, அவன் மனம் கடும் துயரில் மூழ்கியது.
ஒரு நாள், தன் மந்திரவாதியை அழைத்து, "இலாராவை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா?" என்று கேட்டான்.
மந்திரவாதி தலை அசைத்து, "இயற்கையின் விதியை மாற்ற முடியாது, மன்னா," என்றான்.
மிராக்கஸ், "அப்படியானால், இலாராவின் இசையை என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ள என்ன செய்யலாம்?" என்று கேட்டான்.
மந்திரவாதி யோசித்து, "இலாராவின் வயலினில் ஒரு மந்திரத்தைச் செலுத்தலாம். அப்படிச் செய்தால், இந்த நாட்டில் யாரும் இசைக்கருவிகளை வாசிக்க முடியாது. ஆனால், இலாராவின் இசை எப்போதும் உங்கள் நினைவில் இருக்கும்," என்றான்.
மிராக்கஸ் உடனே சம்மதித்தான். மந்திரவாதி வயலினில் மந்திரத்தைச் செலுத்தினான். அன்றிலிருந்து, மெலோடியா நகரில் இசை என்ற ஒன்றே இல்லாமல் போனது.
ஆயிரம் ஆண்டுகள் கழித்து, அமரா என்ற ஒரு இளம் பெண், தன் பாட்டியின் பழைய வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
தூசி படிந்த ஒரு பெட்டியைத் திறந்தபோது, அதில் ஒரு பழைய வயலின் கிடந்தது. அவள் அதை எடுத்து, தன் விரல்களை தந்திகளில் ஓடவிட்டாள். அந்த வயலின், மெல்லிய இசையை எழுப்பியது. அந்த இசை, அமராவின் இதயத்தைத் தொட்டது.அமாராவின் வீட்டை சுற்றியிருந்த மக்கள், அந்த இசையைக் கேட்டு வியந்தனர். அவர்களின் மனதில், மறக்கப்பட்ட இசையின் நினைவுகள் மீண்டும் உயிர் கொண்டெழுந்தது .
அமராவின் இசை, மக்களின் இதயத்தை மயக்கும் ஆனந்த அலையாகப் பரவியது.
மக்கள் தங்கள் வீடுகளில் பழைய இசைக் கருவிகளை தேடி எடுத்து வாசிக்கத் தொடங்கினர். மிராக்கஸின் மந்திரம் உடைந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மெலோடியா நகரத்தில் இசையின் புதிய சகாப்தம் தொடங்கியிருந்தது!