Saturday, 14 December 2024

ஆண்களை நம்பாதே! - மதிபாலன்

 

 அது சென்னையின் ஒரு பரபரப்பான  தெருவில் அமைந்த,  பழமை வாய்ந்த மனநல மருத்துவமனை. அங்கு, தினமும் பல வாழ்க்கைக் கதைகள் பதிவாகி வந்தன.

 அப்படி ஒரு நாள், பிரியா என்ற இளம் பெண், தன் அப்பா அம்மாவுடன்  டாக்டர் கிருஷ்ணனைப் பார்க்க வந்தாள்.

பிரியா, வெளியில் பார்க்க நன்றாக இருந்தாலும்  உள்ளுக்குள் எப்போதும் பயந்து கொண்டே இருந்தாள்.  அவளால் யாரையும் நம்ப முடியவில்லை. கல்யாணம் பற்றி யோசிக்கவே பயந்தாள்.

 பிரியாவின் அப்பா அம்மா இருவரும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தனர்.

 "டாக்டர், எங்களுக்கு ஒண்ணும் புரியல. எவ்வளோ முயற்சி செய்தாலும், பிரியா எந்தப் பையனையும் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டேங்கிறா," என்று கவலையோடு சொன்னார்  பிரியாவின் அப்பா கணேசன்.

டாக்டர் கிருஷ்ணன், அவர் சொன்னதை அமைதியாக கேட்டுக் கொண்டார். "கவலைப்படாதீங்க. பிரியாவுடன் பேசிப் பார்க்கிறேன். நிச்சயமா ஒரு தீர்வு கிடைக்கும்,"  என்றார்.

பிறகு, டாக்டர் கிருஷ்ணன்  " நீங்க ரெண்டு பேரும் வெளியே போய் பிரியாவை  உள்ள அனுப்புங்க" என்றார்.

 சில வினாடிகளில் மெலிதாய் கதவைத் தட்டி அனுமதி கேட்டு விட்டு உள்ளே நுழைந்தாள் பிரியா.

   டாக்டர் கிருஷ்ணன்  தனது கண்ணாடியை சரி செய்து கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தார்.

"பிரியா, உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு, நான் உன்னை புரிஞ்சுக்கிறேன்,"  என்றார்.

பிரியா கொஞ்சம் தயங்கிட்டு, "டாக்டர், எனக்கு யாரையும் நம்ப முடியல. எப்பவும் தனியா இருக்கணும்  மாதிரியே தோணுது.

 நான் டென்த் படிக்கிறப்ப  ஒருத்தன் என்னை கிண்டல் பண்ணான். நான் கோபத்துல அவனை கன்னத்துல அறைஞ்சிட்டேன். அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு.

அதுக்கு அப்புறம் எல்லாரும் என்னை தப்பாவே  நினைச்சு என்னை விட்டு ஒதுங்கிட்டாங்க. அந்த நாளிலிருந்து என்னால யாரையும் நம்ப முடியல " என்றாள். 

டாக்டர் கிருஷ்ணன், பிரியாவோட கண்ணைப் பார்த்து , "பிரியா, அந்த சம்பவம் உன்னோட மனசுல ரொம்ப காயத்தை ஏற்படுத்திருக்குன்னு எனக்குத் தெரியுது. 

 அந்த ஒரு  சம்பவம் உன்னோட மனசுல பயத்தை விதைச்சு, ஒரு பெரிய மரமா வளர்ந்துருச்சு. ஆனா, அந்த மரத்தை வேரோட பிடுங்கி எறியலாம். அதற்கு நாம் சிறிது முயற்சி எடுக்கணும்"  என்றார் .

பிறகு, டாக்டர் கிருஷ்ணன் பிரியாவுக்கு ஒரு கதையை சொன்னார். "ஒரு நாள் ஒரு விதை தரையில விழுந்தது. அது மெல்ல வளர்ந்து ஒரு மரமா மாறியது.

 அந்த மரத்தின் கிளைகளில் ஒரு பூ பூத்தது. அந்த பூவை ஒரு சிறுமி பறித்துக்கொண்டாள். பூ பறிக்கப்பட்டதால மரம் ரொம்ப வருத்தப்பட்டது. ஆனா, சிறிது நேரத்தில் மரம் புதிய பூக்களை பூத்தது. 

அதேபோல, உன்னோட மனசுல பூத்திருக்கும் பயம் என்ற பூவை நீயே பறித்து எறிய வேண்டும். உன்னோட மனசுல புதிய நம்பிக்கை என்ற பூவை பூக்க வைக்க வேண்டும்," 

டாக்டர் கிருஷ்ணனின்  வார்த்தைகள் பிரியாவின் மனதில் ஒரு புதிய ஒளியை  ஏற்றின. 

அவள் தன் கடந்த காலத்தை மறக்க முடியாது என்று  உணர்ந்தாள் . ஆனாலும் அதை மீறி முன்னேற வேண்டும் என்ற உறுதியும் அவளுக்கு ஏற்பட்டது.

பிறகு, டாக்டர் கிருஷ்ணன் பிரியாவின் பெற்றோரை மீண்டும் கூப்பிட்டு, பிரியாவின் நிலை பற்றி விளக்கினார்..

 "பிரியாவுக்கு மனதளவில் சில பிரச்சினைகள் இருக்கு. அதை நாங்க PTSD (Post-Traumatic Stress Disorder) அப்படின்னு சொல்லுவோம். 

 அதாவது எப்பவோ நடந்த ஒரு கசப்பான சம்பவத்தால ஏற்படும் ஒரு மன அழுத்தக் கோளாறு   .அப்படி பிரியாவுக்கும் நடந்திருக்கு.  

ஸ்கூல் டேஸ்ல ஒரு பையன் கிண்டல் பண்ணதனால ஏற்பட்ட பிரச்சனை அவ மனச பாதிச்சிருக்கு. அந்தக் கசப்பான சம்பவத்துக்கு அப்புறம்  அவளால எந்த ஆணையும் நம்ப முடியாமல் போயிருக்கு. 

அவளுக்கு சரியான சிகிச்சை கொடுத்தா நிச்சயமாக குணமாயிடுவா ," என்றார் .

 அவர்கள் டாக்டரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்கள். பிரியாவுக்கு எல்லா உதவிகளும் செய்வதாக உறுதியளித்தார்கள்.

 "அவ, சரியானால்  போதும் டாக்டர் " என்று கண் கலங்கினாள்  பிரியாவின் அம்மா சாந்தி.

பல அமர்வுகளுக்குப் பிறகு, பிரியா தன் கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்தாள். டாக்டர் கிருஷணன் அவளுக்கு நிறைய பயிற்சிகளை கொடுத்தார். அவள் தன் மீதுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க உதவினார்.

ஒரு நாள், பிரியா மிகவும் மகிழ்ச்சியுடன் டாக்டர் கிருஷ்ணனைப் பார்க்க வந்தாள். 

"டாக்டர், நான் இப்போது நிறைய மாறிவிட்டேன். எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிருக்கு. தேங்க்ஸ்  டாக்டர்  ,"என்று நெகிழ்வுடன் சொன்னாள்.

டாக்டர் கிருஷ்ணன் புன்னகைத்து, "இது உன் முயற்சிக்கு கிடைத்த வெற்றி பிரியா. இனிமே எல்லாம் நல்லதாகவே நடக்கும் ," என்றார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிரியாவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியின் வெளிச்சம் பரவத் தொடங்கியது!

No comments:

Post a Comment